search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் இன்ஸ்பெக்டர்"

    துபாய் விமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றினார். #DubaiCop #DeliverAtAirport
    துபாய்:

    துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன் உசைன் முகமது, சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், தனக்கு வயிறு மிகவும் வலிப்பதாக கூறி உதவி கேட்டுள்ளார்.

    உடனே, இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன், அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, அவர் 6 மாதம் 5 நாட்கள் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். அவரது ஆடையில் ரத்தம் சிந்தியிருந்ததைப் பார்த்து பதறிப்போன இன்ஸ்பெக்டர் கார்பரல் ஹனன், உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

    அத்துடன், அங்குள்ள பரிசோதனை அறைக்கு அந்த கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்று தரையில் படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்தார்.  அப்போது அவருக்கு பிரசவ வலி மேலும் அதிகரித்தது. கர்ப்பப் பையில் இருந்து குழந்தை வெளியேற ஆரம்பித்தது.

    இனியும் தாமதித்தால் தாயின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கார்பரல் ஹனன், பிரசவம் பார்த்துள்ளார். தலை திரும்பிய நிலையில், கர்ப்பப் பையை விட்டு வெளியே வராமல் இருந்த குழந்தையை லாவகமாக வெளியே எடுத்துள்ளார்.  பின்னர்  மருத்துவர்கள் வந்து தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இதுபற்றி கார்பரல் ஹனன் கூறுகையில், “6 மாதத்திலேயே பிறந்த அந்த ஆண் குழந்தையை, கர்ப்பப் பையை விட்டு வெளியே எடுத்ததும் அழவில்லை, மூச்சும் விடவில்லை. ஏதோ பிரச்சனை இருப்பதை அறிந்த நான், உடனடியாக குழந்தையை காப்பாற்றுவதற்காக அவசர முதலுதவியை செய்தேன்.



    முதலில் குழந்தையின் முதுகில் தட்டினேன், அப்போதும் அழவில்லை. பின்னர் குழந்தையின் மார்புக்கு சற்று அழுத்தம் கொடுத்து இதயத்துடிப்பை ஏற்படுத்த முயற்சி செய்தேன். இதனால் சிறிது நேரத்தில் குழந்தை அழத் தொடங்கியது. என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தையின் இனிமையான குரலைக் கேட்ட பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது” என்றார்.

    சரியான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு, தாயையும் குழந்தையையும் காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டரின் உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது செயலைப் பாராட்டி துபாய் காவல்துறை சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. #DubaiCop #DeliverAtAirport
    ஒரத்தநாடு அருகே போலீஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் மீது உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் புதுவளைவு பகுதியை சேர்ந்த ஆசைதம்பி மகன் ஜெயச்சந்திரன் (வயது 35). திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தென்பறையை சேர்ந்தவர் தமிழ்மாறன். இவர்கள் 2 பேரும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் தமிழ்மாறன் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தனது உறவினரும் போலீஸ் அதிகாரியுமான ஒருவர் மூலம் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஜெயச்சந்திரன் மீது புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, ஏட்டு சதீஷ் ஆகியோர் ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது ஜெயச்சந்திரனை தாக்கி அவரது செல்போனை பறித்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் சென்ற ஜெயச்சந்திரன் நீண்ட நேராமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஆசைதம்பி மற்றும் உறவினர்கள் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு வந்து பார்த்த போது ஜெயச்சந்திரனை போலீசார் தாக்கி செல்போனை பறித்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய போவதாக ஜெயச்சந்திரனின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில் வாலிபரை விசாரணைக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    மதுரை சிறைத்துறை பெண் சூப்பிரண்டை தொடர்ந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. #BulletNagarajan #WomenInspector
    தேனி:

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்த ரவுடி நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். இவர் மதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.



    ஆடியோவில் ‘புல்லட்’ நாகராஜன் பேசியிருப்பதாவது:-

    இன்ஸ்பெக்டருக்கு நடிகை விஜயசாந்தி என்று நினைப்பா? சரியான பெண்ணாக இருந்தால் இரவு தனியாக ரெய்டுக்கு வரவேண்டியது தானே. 10 போலீஸ்காரர்களை வைத்துக்கொண்டு அடிப்பது பெரிது கிடையாது. இன்னொரு வாயாடி ஜெயமங்கலத்தில் இருந்தது. அதை இப்பதான் டிரான்ஸ்பர் பண்ணிவிட்டேன். ஒவ்வொரு ஆளையும் தூக்கிவிட்டுக்கொண்டே இருக்க முடியாது. இது நிரந்தர பணி நீக்கம் ஆகிவிடும்.

    இன்னொரு முறை என்னுடைய மண்ணில் உள்ள பெரியகுளத்துக்காரங்களை யாரை கைவைத்தாலும் நேரடியாக நான் வருவேன். பெண்ணாக இருப்பதால் ஒரு வாய்ப்பு தருகிறேன். 2-வது வாய்ப்பு தர நான் ஒன்றும் கடவுள் கிடையாது. பாவம் அனாதையாக ஈ மொய்த்துக்கிடக்கும் அளவுக்கு ஆகிவிடாதீர்கள்.

    உன் வீட்டை சுற்றிலும் 100 போலீஸ் போட்டுக்கோ. என்னை பிடித்துவிட்டால் நான் அதே இடத்தில் இறந்துவிடுகிறேன். உங்களுக்கு எங்கே தொட்டால் வலிக்கும் என்பது எனக்கு தெரியும். இனிமேல் என்னுடைய பசங்ககிட்ட வாலாட்டினால் நான் எடுக்கிற ஆக்‌ஷன் பயங்கரமாக இருக்கும்.

    இது, சினிமா கிடையாது. நீங்கள் ஒன்றும் நடிகை விஜயசாந்தி கிடையாது. சினிமா எல்லாம் பார்க்காதீர்கள். டியூட்டியை மட்டும் பாருங்கள். இல்லையென்றால் புழல் சிறைக்கு அனுப்பிவிடுவேன்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் கேட்டபோது, ‘சில நாட்களுக்கு முன்பே இந்த ஆடியோ எனக்கு வந்தது. உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இப்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி உள்ளது. நான் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை. எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை’ என்றார்.  #BulletNagarajan #WomenInspector 
    விசாரணை என்ற பெயரில் சாப்ட்வேர் என்ஜினீயரை அவதூறாக பேசிய பெண் இன்ஸ்பெக்டருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாபு என்ற சேஷாத்திரி. சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு எனது மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதன்பின்பு, என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் எனது மனைவி அம்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி விசாரணைக்காக என்னையும், என் குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார். நாங்களும் விசாரணைக்கு சென்றோம். அப்போது இன்ஸ்பெக்டர், எனது மனைவியை நாற்காலியில் அமர வைத்து பேசினார். என்னையும், எனது குடும்பத்தினரையும் நீண்ட நேரமாக நிற்க வைத்து எனது மனைவி முன்னிலையில் என்னை அவதூறாக பேசினார். எனது காலில் காயம் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவது குறித்து இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தபோதும் அவர் என்னை நாற்காலியில் அமர வைக்காமல் வேண்டுமென்றே அவமானப்படுத்தினார். எனவே, இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் சான்று ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×